தமிழ்நாடு (Tamil Nadu)

4வது நாளாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கப் போராடும் வனத்துறை

Published On 2024-06-08 05:29 GMT   |   Update On 2024-06-08 05:29 GMT
  • குட்டி யானை, தாயுடன் சேராமல் தனியாக பிரிந்து வந்து விட்டது.
  • குட்டி யானை மருதமலை வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

கோவை:

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் யானை கிடந்தது. அதன் அருகே ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது. வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதற்கு முன்னதாகவே அதன் குட்டி யானை காட்டுக்குள் சென்று விட்டது.

இந்தநிலையில் குட்டி யானை, தாயுடன் சேராமல் தனியாக பிரிந்து வந்து விட்டது. விராலியூர் அருகே தனியார் தோட்டத்தில் பரிதவிப்புடன் நின்ற குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு அதனை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அட்டுக்கல் வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியை வனத்துறையினர் சேர்க்க முயன்றபோது, தாய் யானை குட்டியை நிராகரித்து விட்டு ஓடிச் சென்றது. இதனால் தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது. பின்னர் குட்டி யானையை வாகனம் மூலம் மருதமலை யானை மடுவு யானை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு வேறு காட்டு யானைகள் கூட்டத்துடன் அதனை சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள் குட்டியை தங்களுடன் சேர்க்காமல் விரட்டி விட்டது.

இதனால் குட்டி யானை மருதமலை வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர். குட்டி யானை வனத்துறையினரிடமும், பொதுமக்களிடமும் நன்கு பழகி விட்டது. யானைக்கு பழம் கொடுப்பது, உணவு கொடுப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள். மக்களுடன் பழக்கப்பட்டு விட்டதால் தான் குட்டி யானையை காட்டு யானைகள் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்கும் பணி இன்று 4-வது நாளாக நடைபெற உள்ளது. இன்றைய முயற்சியில் தோல்வி அடைந்தால் குட்டி யானையை டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News