பறக்கும் படை கெடுபிடிகளையும் தாண்டி தேர்தல் சமயத்தில் களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை
- தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
- வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு, கோழி, சேவல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
பெரும்பாலும் ஆடு, கோழிகள் வாங்குவதற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவதுண்டு. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிக அளவு பணம் சந்தைக்கு கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. பங்குனி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஆடுகள் பலியிடப்படும்.
மேலும் ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும் ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும் என நினைத்து ஏராளமான செம்மறி, வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. மெயின் ரோட்டில் வழியாக வராமல் புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.
தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது. விதவிதமான சேவல்களை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் வாலிபர்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ரூ.3000 முதல் ரூ.30000 வரை சேவல்கள் விற்பனையாகின. தேர்தல் சமயத்தில் ஆடு, கோழிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமோ என்று விவசாயிகள் கவலையடைந்த நிலையில் அதிக அளவு கால்நடைகள் எதிர்பார்த்த விலைக்கு விற்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.