ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்: திருவள்ளூர் கோவிலில் அதிகாலையில் குவிந்தனர்
- கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார்.
- பூஜைப் பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர்:
சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியதை தொடர்ந்து நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதேபோல் திருவள்ளூர் வல்லபமகா கணபதி கோயில், காக்களூர் சிவாவிஷ்ணு கோயில், திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோயில், திருத்தணி சுந்தர விநாயகர் கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மப்பேடு சிங்கீஸ்வரர், கூவம் ஒன்றீஸ்வரர், திருமழிசை ஓத்தாண்டீஸ்வரர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மீஞ்சூரில் உள்ள தர்மசாஸ்தா கோவில், சூரப்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவிலில் பாண்டுரங்க குருசாமி தலைமையில் ஏராளமான மாலை அணிந்து விரதத்தை தொங்கினர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.