6 பேர் விடுதலை செய்யப்பட்டவுடன் மத்திய அரசு அவசர கதியில் சீராய்வு மனு தாக்கல் செய்வது ஏன்?- பாலகிருஷ்ணன் கேள்வி
- தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.
- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு நேரடியாக இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்சநீதிமன்றம் தானாக விடுதலை செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.
இப்பிரச்சினையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.
தற்போது 6 பேர் விடுதலை செய்யப்பட்டவுடன் மத்திய அரசு அவசரகதியில் சீராய்வு மனு தாக்கல் செய்வது ஏன்? குஜராத், மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு செயல்பட்டதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
தற்போது காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக 2 ஆயிரம் கல்லூரி மாணவ-மாணவிகளை கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு கவர்னரும் உடந்தையாக உள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையற்றது என்பதால் அதனை அகற்ற வேண்டும். ஏற்கனவே கல்லூரிகளை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கூடமாக மத்திய அரசு மாற்றி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாக 100 சதவீதம் தமிழை கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அவரது தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும். அந்த கட்சியினரால் வெற்றி பெற முடியாது. அவர்கள் மக்கள் மனதை விட்டு அகற்றப்பட்டு விட்டனர்.
தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.