ஹுக்கா பார் நடத்த தடை... மீறினால் 3 ஆண்டுகள் சிறை- சட்டசபையில் மசோதா நிறைவேறியது
- தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
- சென்னையில் புகைக்குழல் கூடங்கள் அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ, தமிழகத்திற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை. எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.