ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க 5-வது நாளாக தடை
- சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
- கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பருவ மழை கள் வழக்கத்தை விட குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மைனஸ் அடிக்குச் சென்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. முக்கடல் அணையும் பிளஸ் அளவிற்கு வந்தது. தொடர்ந்து பெய்த மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக மலைப்பகுதிகளில் பெரும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது.
திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பியதால், மறுகால் பாய்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த சூழலில் நேற்று பகல் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு-2 அணை பகுதியில் 34.2 மி. மீ. மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 24.6 மி. மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ. மழையும் பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 17.6 மி.மீட்டரும், பேச்சிப்பாறை அணையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.84 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள் உச்ச அளவை எட்டி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1451 கன அடி நீரும், பெரு ஞ்சாணி அணைக்கு 1180 கன அடி தண்ணீரும் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று சிற்றாறு-1 அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பழையாறு, வள்ளி ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால், 5-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மழை குறைந்தபோதிலும், வெள்ளத்தின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தே உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.
மழை பெய்யும் போதெல்லாம் தங்கள் குடியிருப்பு பகுதி இதே நிலையை தான் சந்திக்கிறது. இதுபற்றி பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாரில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 3 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவலோகம் (சிற்றாறு-2) 34.2 சிற்றாறு-1 24.6, பெருஞ்சாணி 19.8 புத்தன் அணை 17.6 பேச்சிப்பாறை 12.4, பாலமோர் 5.2 முள்ளங்கினாவிளை 4.6 திற்பரப்பு 4.5, தக்கலை, களியல், மாம்பழத்துறையாறு 3.2.