பீன்ஸ், கத்தரிக்காய் ரூ.100-ஐ கடந்தது: மிளகாய், இஞ்சி விலை 3 மடங்கு உயர்ந்தது
- தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
- இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.
இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,
காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.