தமிழ்நாடு

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது

Published On 2022-09-22 04:13 GMT   |   Update On 2022-09-22 04:13 GMT
  • பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
  • கூண்டுக்குள் சிக்கியதால் மிரண்ட கரடி தப்பிக்கும் எண்ணத்தில் கூண்டுக்குள் முட்டி மோதியதால் அதற்கு ரத்த காயங்கள் காணப்படுகின்றன.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.

பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் பூதத்தான்குடியிருப்பு கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அங்குள்ள களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையை ஒட்டியுள்ள வேம்படி சுடலைமாடசாமி கோவிலுக்கு, விளக்கேற்றும் எண்ணெயை குடிப்பதற்காக கரடிகள் அடிக்கடி வந்து சென்றதை உறுதிபடுத்தினர்.

இதையடுத்து அங்கு கரடிகளை பிடிக்க கடந்த 20-ந்தேதி முதல் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று அதிகாலையில் அப்பகுதிக்கு வந்த ஒரு கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அந்த கரடி 5 வயதுடைய ஆண் கரடி ஆகும்.

கரடியை பார்க்க கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூண்டுக்குள் சிக்கியதால் மிரண்ட கரடி தப்பிக்கும் எண்ணத்தில் கூண்டுக்குள் முட்டி மோதியதால் அதற்கு ரத்த காயங்கள் காணப்படுகின்றன.

கரடிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிடிபட்ட கரடியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் சுற்றும் மேலும் 2 கரடிகளையும் பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News