நீட் தேர்வு ரத்து சட்ட மசோதா: தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு கவர்னர் மீது பழிபோடலாமா?- தி.மு.க. மீது ஜார்கண்ட் கவர்னர் தாக்கு
- காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
- முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.
கோவை:
ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
இவர்கள் இன்னும் 1952-ல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமும், அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தை செலுத்துவதும், தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும் நல்லது. ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.
தி.மு.க. பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு எதையும் எதிர்பார்க்காத நல்ல கவர்னர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட கவர்னர் கிடைத்திருக்கிறார்.
அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவை அமல்படுத்த முடியுமா?. முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை கவர்னர் மீது போடுகிறீர்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் கவர்னர் கையெழுத்திட முடியும்.
ஏழை மக்களின் நிலையை கண்டு, பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே ரூ.200 கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது
பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.