null
ஆந்திராவில் பறவை காய்ச்சல்: தமிழகத்துக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை
- எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
- சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.
இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.
இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.