தமிழ்நாடு

கறுப்பு உடை விவகாரம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது போலீசில் புகார்

Published On 2023-06-30 05:51 GMT   |   Update On 2023-06-30 05:51 GMT
  • கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
  • கறுப்பு உடை அணியக்கூடாது என்று கூறவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சேலம்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

முன்னதாக கவர்னர் சேலம் வருவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கை வெளியிட்டது.

காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதேவேளையில் கறுப்பு உடை அணியக்கூடாது என்று கூறவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என விதித்த தடையை வாபஸ் பெற்றது. விழா நடந்து முடிந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தினர் மாநகர காவல் துறையில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

புகாரில் காவல்துறை மேல் பழி போட்டு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News