தமிழ்நாடு

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுகள் வழக்கம்போல் இயக்கம்: சுற்றுலா பயணிகள் பேக் கொண்டு செல்ல தடை

Published On 2024-05-31 05:03 GMT   |   Update On 2024-05-31 05:03 GMT
  • மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  • கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதற்காக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வந்தார். இன்று 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.

பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ளதையடுத்து கன்னியாகுமரி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சன்னதி தெரு படகு தளத்திற்கு செல்லும் சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வருபவர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு வழக்கம்போல் படகு இயக்கப்பட்டது. இன்று காலை விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள் உடமைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகளில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி கடற்கரைக்கும் காலையிலேயே சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் வழக்கம்போல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். கடற்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News