தமிழ்நாடு

வேட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்... போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-11-17 09:39 GMT   |   Update On 2023-11-17 09:39 GMT
  • வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது.
  • யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முத்து முருகன் மகன் குரு பிரவீன் (வயது 16) மற்றும் தங்கப்பாண்டி மகன் யோகேஷ் பாண்டி (9). இவர்கள் தீபாவளிக்கு முதல் நாள் அதே பகுதியில் பட்டாசுகள் வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது குருபிரவீன் கையில் குருவி சுடும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியை வைத்திருந்தான். அவன் விளையாட்டாக அருகில் இருந்த யோகேஷ் பாண்டியை நோக்கி துப்பாக்கியை இயக்கி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு யோகேஷ் பாண்டியின் வயிற்றுக்குள் புகுந்தது. ஆனால் அதை உணராமல் வயிற்றில் அடிபட்டதாக நினைத்து வலியில் யோகேஷ் பாண்டி துடித்துள்ளார்.

உடனடியாக அவரை திருச்சுழி மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று சிறுவன் வீடு திரும்பினான். ஆனால் சிறுவனுக்கு மீண்டும் வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து சிறுவனின் தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி சிறுவனின் கைக்கு எப்படி வந்தது? அல்லது வேறு யாரிடமாவது வாங்கி வந்து வேட்டையில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News