கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து அண்ணன்-தம்பி பலி
- அண்ணன், தம்பி இருவரும் திடீரென தரை கிணற்றில் தவறி விழுந்தனர்.
- ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி போலீஸ் சரகம் பிரமகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மகன்கள் தமிழ்மாறன் (வயது 10), மோகனபிரியன் (9). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படித்தனர். இவர்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள தரை கிணற்றின் ஓரம் காலை கடன் கழிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 2 பேரும் தரை கிணற்றில் தவறி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
இதனால் ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுகுறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். அவர்களை கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது 2 சிறுவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தினார்.