தமிழ்நாடு (Tamil Nadu)

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கிடக்கும் காட்சி

பரமத்திவேலூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- 5 பெண்கள் உயிரிழப்பு

Published On 2023-02-28 05:27 GMT   |   Update On 2023-02-28 05:27 GMT
  • திருச்செங்கோடு தாலுகா மோர்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 25-ந்தேதி டெம்போ மற்றும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.
  • காரை ஓட்டி வந்த டிரைவர் ரவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

பரமத்திவேலூர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூரில் கன்னிமாரம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மோர்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 25-ந்தேதி டெம்போ மற்றும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

திருவிழா முடிந்ததும் அவர்கள் கார் மற்றும் வாகனங்களில் ஊருக்கு புறப்பட்டனர். இதில் ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். காரில் அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர்களான மகாலட்சுமி என்கின்ற சுதா, மணி என்கின்ற கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, ரவியின் மைத்துனர் குழந்தை லக்ஷனா(4) ஆகிய 7 பேர் அமர்ந்திருந்தனர்.

கார் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் கரூர்-நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் படமுடிபாளையம் பகுதியில் உள்ள பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே காரில் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ரவி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் ரவியின் மனைவி கவிதா, மகாலட்சுமி என்கின்ற சுதா, மணி என்கின்ற கந்தாயி, குஞ்சம்மாள் ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் காரில் அமர்ந்திருந்த சாந்திக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் ரவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. ரவியின் மைத்துனரின் 4 வயது குழந்தை லக்ஷனாவுக்கு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த ரவி மற்றும் குழந்தை லக்ஷனாவை மீட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான பெண்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கவிதா, மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள் ஆகியோரது உடல்கள் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், சாந்தி உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

டிரைவர் ரவி இரவில் சரியாக தூங்காமல் விழித்திருந்து காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அந்தவழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் 5 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News