தமிழ்நாடு

வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை: இதேபோல் கானா பாட முடியுமா என நெட்டிசன்கள் எதிர்ப்பு

Published On 2024-03-12 09:50 GMT   |   Update On 2024-03-12 09:50 GMT
  • சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே, இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

இந்த புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடி மகிழ, அவரது தோழி நாட்டியக் குறிப்புகளுடன் அசைவுகள் கொடுக்கும் வீடியோ ஒன்றை தென்னிந்திய ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது கூட சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்கவும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை பாடல் பாடுவது பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதா? இதே போல கிராமிய, கானா பாடல்களை பாட ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News