தமிழ்நாடு (Tamil Nadu)

விஜயபாஸ்கருக்கு சொந்தமான 8 இடங்களில் அதிரடி சோதனை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2024-07-07 06:19 GMT   |   Update On 2024-07-07 06:20 GMT
  • ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • 7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட சி.பி .சி .ஐ .டி போலீசார் சோதனை நடத்தினர்.

வழக்கில் தொடர்புடைய யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இதனிடையே இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை நேற்று இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை தொடர்ந்து இன்று கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, கரூர் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட் மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு ஆகிய இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

இதேபோல் கரூர், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திரு.வி.க சாலையில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையில் நில மோசடி தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? வேறு ஆவணங்கள் இருக்கிறதா? என்று ஆய்வில் ஈடுபட்டார்கள்.

7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனை நடத்த திட்டமிட்டிருந்த சில இடங்களில் பூட்டு போடப்பட்டு ஆட்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

இந்த திடீர் சோதனை காரணமாக கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதை தொடர்ந்து கரூர் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News