தமிழ்நாடு

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2024-07-02 14:18 GMT   |   Update On 2024-07-02 14:18 GMT
  • சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
  • முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதலும் வன்முறையும் தலைதூக்கியிருப்பது ஆபத்து வாய்ந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வு அதே பள்ளிகூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த சாதி வெறி என்பது. இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News