பஸ் கண்டக்டரை கல்லால் தாக்கி செல்போனை பறித்த கொள்ளையர்கள்
- ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர்.
- தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நந்திவாடி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மாநகர பேருந்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். திருவான்மியூர் பணிமனையில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி சிக்னல் அருகில் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் வாசுதேவனிடம் சென்று அவரது செல்போனை கேட்டனர். அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மயங்கிய வாசுதேவனிடமிருந்து செல்போனை 3 பேரும் பறித்துச்சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாசுதேவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச்சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.