தமிழ்நாடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்

Published On 2023-12-18 13:18 GMT   |   Update On 2023-12-18 13:22 GMT
  • திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
  • முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட நான்கு பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முருகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவரது பூர்வீகம் இலங்கை என்பதால் அவர் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

இதையடுத்து திருச்சி முகாமில் இருக்கும் முருகன், லண்டன் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார்.

மேலும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டும் தான் முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக உயர்நீதிமன்ற கிளையில் முருகன் தாக்கல் செய்த மனுவில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனக்கும், என் மனைவி நளினிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டோம். நான் முகாமிலும், என் மனைவி, மகள் தனியாகவும் வசித்து வருகின்றனர். எனது மகள் லண்டனில் உள்ளார்."

"32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். எஞ்சியுள்ள காலத்தில் லண்டனில் உள்ள மகளுடன் வசிக்க ஆசைப்படுகிறோம். இதற்காக பாஸ்போர்ட் பெற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும், ஆன்லைன் வழியாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News