தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

Published On 2023-02-08 07:18 GMT   |   Update On 2023-02-08 07:18 GMT
  • நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
  • மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

வேதாரண்யம்:

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.

பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.

திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.

முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.

அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.

தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.

நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News