null
- மெட்ரோ 32 ரெயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய சில மாதங்கள் வரை அதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
மெட்ரோ ரெயில்... சென்னை மக்களின் உதடுகளில் இந்த வார்த்தை 2015-ம் ஆண்டில் ஒட்டத் தொடங்கியது. மின்சார ரெயிலையும், பறக்கும் ரெயிலையும் பார்த்த மக்களுக்கு இது ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. பூமிக்கு மேலேயும், பூமிக்கு அடியிலேயும் இவை ஓசையில்லாமல் பயணத்தை தொடங்கியது.
சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைப்பெற்ற மெட்ரோ ரெயில் முதல் திட்டம் 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தொடங்கியது. கோயம்பேடு- பரங்கிமலை இடையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் ரூ.18,380 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. 45 கிலோ மீட்டர் நீளத்தில் மெட்ரோ 32 ரெயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 13 உயர்நிலை பாதை ரெயில் நிலையங்கள், 19 சுரங்கப் பாதை ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடம் என்ற பெயரில் முதல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல்-கோயம்பேடு- பரங்கிமலை ஒரு வழித் தடத்திலும், திருவொற்றியூர் விம்கோ நகர்- விமான நிலையம் மற்றொரு வழித்தடத்திலும் தற்போது மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் 2 அடுக்குகள் கொண்டவை. இந்த இரண்டு ரெயில் நிலையங்களிலும் நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடங்களுக்கு இடையே பயணிகள் மாறிச் செல்ல வேண்டும்.
நீல வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
ரெயில்வே முனையங்கள், பஸ் முனையங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற சென்னையின் முக்கியமான இடங்களை முதல்கட்ட திட்டத்திலேயே இணைக்கும் இந்தியாவின் முதல் கட்ட மெட்ரோ ரெயில் அமைப்பு சென்னை மெட்ரோ ரெயில் ஆகும்.
அதிநவீன உள் கட்டமைப்பு இணைப்பு வாகன வசதியுடன் சென்னை மெட்ரோ ரெயில் சேவையின் மூலம் நகரம் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய சில மாதங்கள் வரை அதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. காட்சிப் பொருளாகவே மக்கள் பார்த்தனர். கட்டணம் அதிகமாக இருப்பதாக கருதி பயணம் செய்வதை தவிர்த்தனர். ஆரம்ப காலத்தில் 20, 25 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
ஆனால் நாட்கள் ஓடியது, ஆண்டுகள் கடந்தன. சென்னை மக்கள் படிப்படியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினார்கள்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. ஆட்டோ, கார் போன்ற வாகன வசதிகளும் செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
ஒரு லட்சம், 2 லட்சம் என பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் இன்று பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலை வேளையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நின்று பயணம் செய்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு இன்றைய காலக் கட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக கருதப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள், ஐ.டி. தொழில் சார்ந்தவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், அங்கிருந்து வருபவர்கள் மிக எளிதாக விமான நிலையத்திற்கு செல்லவோ, வீடுகளுக்கு திரும்பவோ மெட்ரோ ரெயில்கள் சேவை மகத்தானதாக உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவு பெற்று நாளை (29-ந்தேதி) 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 9 வருடத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை 29 கோடியே 87 லட்சம் ஆகும்.
இதுவரையில் சென்னை மக்களின் அங்கமாக இருந்த புறநகர் மின்சார ரெயில்கள் வரிசையில் இப்போது மெட்ரோ ரெயில்களும் இடம் பிடித்து விட்டன.
டிக்கெட் பெறுவதில் எளிதான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூ ஆர் குறியீடு, பேடிம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் டிக்கெட் எடுத்தால் 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதலாக சேவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு சேவை வழங்குவதற்கு கூடுதல் ரெயில் பெட்டிகள் வாங்கப்படுகிறது.
முதல் கட்ட ரெயில் சேவை சென்னை மக்களோடு இணைந்துள்ள நிலையில் 2-வது திட்டப் பணிகள் இரண்டு வருடமாக நடந்து வருகின்றன. இத்திட்டம் ரூ.63,246 கோடி செலவிy; 3 வழித்தடங்களில் செயல் படுத்தப்படுகிறது. 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றில் 118 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-வது கட்ட திட்டம் இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் பணியாக உள்ளது.
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கிண்டி கத்திப்பாராவில் மெட்ரோ தூணின் உயரம் 36 மீட்டர் மற்றும் 125 மீட்டர் வளைவில் 100 மீட்டர் சம நிலையான காண்டிலீவருடன் இடைவெளியில் கட்டப்பட்டுள்ளன. இது பாார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ளன.
2-வது கட்டத்தில் 3 வழித்தடங்களிலும் 2028-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளன. இவை பயன்பாட்டிற்கு வரும் போது 177 கிலோ மீட்டர் மெட்ரோ பாதையில் தினமும் 20 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 25 சதவீதம் பொது போக்குவரத்து பயணங்களில் சென்னை முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்திற்கான உலகத்தரம் வாய்ந்த இடமாக மாறும்.
மேலும் மெட்ரோ ரெயிலின் 2-வது கட்டம் மற்ற பொது போக்குவரத்துகளான மாநகர பஸ், புறநகர் மின்சார ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை ஆகியவற்றுடன் 21 வெவ்வேறு இடங்களில் ஒருங்கிணைப்பட்டு நெரிசல் இல்லாத தடையற்ற சேவை வழங்கப்படும்.
சென்னை பெருநகரத்தின் எந்த பகுதிக்கும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக குறிப்பிட்ட இடத்தை சென்றடையக் கூடிய வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தவிர விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மெட்ரோ ரெயில் முதல் கட்ட திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15 கிலோ மீட்டர் உயர்மட்ட பாதையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுவும் பயன்பாட்டிற்கு வரும் போது வெளி யூர்களில் இருந்து வரும் பஸ் பயணிகள் எளிதாக சென்னைக்குள் வர முடியும்.
புதிய மெட்ரோ ரெயில் திட்டங்கள் மூலம் எதிர்வரும் காலங்களில் மக்கள் இனிமையான சுகமான பயணத்தை தொடர முடியும் என்று அரசு நம்பிக்கை வைத்துள்ளது.