சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
- வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நெல்லை:
ரெயில் பயணிகளுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் விதமாக இந்திய ரெயில்வே சார்பில் நாள்தோறும் புதிய நவீன ரெயில்கள் அறிமு கப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சுமார் 25 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 22-ந்தேதி முதல் முதலாக தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னை-கோவை இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்த நிலையில், ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை இந்த மாதத்தில் இருந்து ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிட்லைன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இருக்கும். இந்த ரெயிலில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேளை உணவு வழங்கப்படும். இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், தீத்தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமிராக்கள், அகலமான ஜன்னல் கண்ணாடிகள், பயணிகளின் உடைமைகளை வைக்க ரேக்குகள் வசதி, சென்சாரில் இயங்கும் நீர் குழாய்கள் உள்ளிட்ட நவீன ஏற்பாடுகள் இருக்கும்.
மேலும் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இலவச வைபை வசதி, ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மெட்ரோ ரெயில்களை போல, பயணிகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டு உள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
இந்த ரெயிலில் வி.ஐ.பி. பெட்டிகளில் சுழலும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும். சாதாரண பெட்டிகளில் சாயும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை-சென்னை இடையே உள்ள 658 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும் வகையில் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சுதந்திர தினத்தன்று தமிழக மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு சுதந்திர தின பரிசாக பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்திப்பு ரெயில்வே மேலாளர் முருகேசன் கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 3 பிட் லைன்கள் உள்ளன. இதில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்சார வசதி தேவை என்பதால் முதல் 2 பிட்லைன்களை தவிர்த்து, 3-வது பிட்லைனில் மட்டும் அதற்கேற்ப மின்மயமாக்கல் பணிகள் தொடங்கி முடிவடைந்துவிட்டது. மேலும் பெட்டிகளில் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும்.
தொடக்கத்தில் பயணிகள் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாததால் 8 பெட்டிகளை மட்டுமே கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால், அந்த ரெயிலில் 2 வி.ஐ.பி. பெட்டிகளும், 16 சாதாரண பயணிகள் பெட்டிகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இதில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் 8 மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி இருப்பதாலும், இதே ரெயில்தான் சென்னைக்கு சென்றுவிட்டு, மறுமார்க்கமாக நெல்லைக்கு வரவேண்டும் என்பதாலும் மதுரை, திருச்சி ஆகிய ரெயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும். இதுதவிர திண்டுக்கல் அல்லது விருதுநகரில் கூடுதலாக ஒரு நிறுத்தம் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வந்தே பாரத் ரெயில் இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடுக்க விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.