தமிழ்நாடு

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சென்னை புறநகர் மின்சார ரெயில் இயக்கம்

Published On 2023-12-04 01:21 GMT   |   Update On 2023-12-04 02:46 GMT
  • பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் வெள்ளம் தேக்கம்.
  • 8 மணிக்குப் பிறகு சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்க பரிசீலனை.

மிச்சாங் புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக ஊர்ந்து சுமார் 6 மணிக்குத்தான் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. தண்டவாளங்களில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக மெதுவாக இயக்கப்பட்டது. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என அனைத்து மின்சார ரெயில்களும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை மற்றும் சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்குவது குறித்த பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி பகுதிகளில் பிரதான ரெயில்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக கோவை, பெங்களூர் செல்லக்கூடிய 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News