தமிழ்நாடு (Tamil Nadu)

2040ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2024-08-04 05:26 GMT   |   Update On 2024-08-04 05:26 GMT
  • 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும்
  • 1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது.

கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அபாயம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆய்வு செய்தது.

கடல் மட்டம் உயருவதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் ஆகிய 15 நகரங்கள் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், மைலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் நினைவு சின்னம், பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டில் சென்னையின் 7.29% பகுதி (86.6 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2060 ஆம் ஆண்டில் 9.65% பகுதி (114.31 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2100 ஆம் ஆண்டில் 16.9% (207.04 சதுர கிமீ) பகுதி கடலில் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரம் சென்னை ஆகும். மேலும், சென்னை உலகில் 35 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்னை நகரின் கடல் மட்டம் 0.66 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள் தூத்துக்குடியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

2100 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 74.7 செ.மீ வரை கடல்மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மும்பை நகரில் கடந்த 30 ஆண்டுகளில் கடல் மட்டம் 44.4 மி.மீ வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மும்பை நகரின் கடல் மட்டம் 3.1 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News