தமிழ்நாடு

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி மோசடி-2 பேர் கைது

Published On 2023-08-02 04:41 GMT   |   Update On 2023-08-02 04:41 GMT
  • குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
  • போலீசார் 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

வந்தவாசி:

விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

வந்தவாசி தாலுகா அலத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 40), திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) ஆகியோர் தங்களிடம் இரிடியம் கண்டுபிடிககும் ரைஸ் புல்லிங் எந்திரம் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் சங்கர் கணேஷ் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் காட்டிய ரைஸ் புல்லிங் எந்திரத்தை பார்த்தபோது அதில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கர்கணேஷ் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து வந்தவாசி போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று காண்டீபனை கைது செய்து ரைஸ் புல்லிங் எந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காண்டீபன் செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலி டாக்டராக மருத்துவம் பார்த்தபோது ஒரத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரைஸ் புல்லிங் எந்திரம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து போலி ரைஸ் புல்லிங் எந்திரம், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

சதுரங்க வேட்டை படத்தில் கலசத்தை வைத்து ஏமாற்றும் காட்சி போல் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News