முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக பக்கம் போகமாட்டார்- செல்வப்பெருந்தகை
- அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும்.
சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாளை காங்கிரசார் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் சின்னமலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
மதவாதத்துக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் கலைஞர். அவருக்கு நாணயம் வெளியிட்டது சிறப்பு. அதே நேரம் அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல. இதை காரணமாக வைத்து பா.ஜகவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று ஹேஸ்யமாக சொல்வது தவறு. எங்கள் கூட்டணி உறவு கெட்டியாக உள்ளது.
மதவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அதே அளவுக்கு தீவிரமாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே அவர் அந்த பக்கம் போக மாட்டார். முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்பும் பாஜகவினர் எவ்வளவு வசைபாடினார்களோ அதையும் திரும்ப பெற வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கி உள்ளது. டீ செலவுக்குக் கூட போதாத இந்த தொகையால் தமிழகத்தில் எந்த ரெயில்வே திட்டத்துக்கும் பலனில்லை. எனவே மத்திய அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் ரூ.1 கூடுதலாக சேர்த்து ரூ.1001-ஐ மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், விஜய் வசந்த் எம்.பி. மாநில நிர்வாகிகள் டி.செல்வம், தணிகாசலம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் முத்தழகன், தி.நகர் ஸ்ரீராம், இல.பாஸ்கரன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.