தமிழ்நாடு

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Published On 2023-08-06 01:32 GMT   |   Update On 2023-08-06 01:32 GMT
  • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
  • விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குழந்தை இன்று உயிரிழந்தது.

முன்னதாக, குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். குழந்தையின் கை வீங்கியதால் செவிலியர்களை தாய் அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ பாதிப்பு ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News