சென்னையில் கொட்டும் மழையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
- சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
- கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை:
சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் கண்ணை கவர்ந்தது.
சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், பெரம்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபங்கள் அமைக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
அதே போல் இன்று காலை 8 மணிக்கு கொட்டும் மழையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்கவிடப்படுகிறது.
நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சென்னை சாந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம், சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.