சோக்காடியில் இரு தரப்பினரிடையே மோதல்: வன்முறையில் ஈடுபட்ட 13 பேர் கைது- 23 பேர் மீது வழக்குப்பதிவு
- சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது.
- 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி கிராமம். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்ட வருகிறது. இந்த பணிகளுக்காக கிரானைட் கற்களை லேயிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதில் இருந்து வரக்கூடிய தூசிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் படிந்துள்ளது.
இதையடுத்து அவர்கள், கோவில் கட்டும் பணியை சுற்றிலும் துணி கட்டி பணி செய்யுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த நேரம் அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்க கூடிய பகுதிக்கு சென்றனர். அவர்கள் கற்களை வீசி அவர்களை தாக்கினார்கள். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
மேலும் ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கூரை தடுப்பிற்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு தரப்பினர் வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் தொடர்புடையவர்களையும், பிரச்சினைக்கு காரணமானவர்களையும் கைது செய்யக் கோரி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் சமரச தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து சோக்காடியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழரசி, கணேசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே அரசியல் கட்சி பிரமுகர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சோக்காடி-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் கல்வீச்சு நடந்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசாரிடம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த தரப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது50), ஆனந்தன் (39), சித்தேவன் (44), சித்தராஜ்(53), மற்றொரு சித்தராஜ் (55) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று சித்தராஜ் தரப்பினர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முனிராஜ் (49), வரதராஜ் (59), குமரன் (23), சத்தியமூர்த்தி (27), செல்வம் (37), சுப்ரமணி (42) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக சோக்காடி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.