தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 'போர்டு' நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்- உயர் அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2024-09-11 08:36 GMT   |   Update On 2024-09-11 08:36 GMT
  • கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
  • வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.

சென்னை:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இப்பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அது பற்றிய விவரங்கள் வருமாறு:-

போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர் பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டு உள்ளது.

போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பு நிகழ்வில், போர்டு நிறுவனத்தின் ஐ.எம்.ஜி. தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர். ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.

ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் திறன் மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News