நா-நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
- பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார்.
- கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலவேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வந்திருப்பது மிக மிக மிக பொருத்தமானது.
பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிடப் பொருத்தமானவர்
'நா-நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது, நாம் கொண்டாடிய கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.