தமிழ்நாடு

உதயநிதியை துணை முதல்வராக்குவது ஜனநாயகத்தை அச்சப்படுத்தும் செயல்- ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-09-19 07:56 GMT   |   Update On 2024-09-19 07:56 GMT
  • 75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது.
  • இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது.

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 10 நாட்களாக பருவ காற்று திசை மாறியதால் இன்றைக்கு மதுரையில் 105 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள். பருவ திசை மாற்றத்தால் வெயில் கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் நாட்டில் யார் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெயிலின் கொதிகலன் போல, தி.மு.க.வில் யார் துணை முதலமைச்சர் என்கிற கொதிகலன் விவாதம் நடைபெற்று வருகிறது.

உதயநிதியை மக்கள் பேசப்பட வைக்க வேண்டும் என்றும், தமிழகம் உதயநிதியை சுற்றுவது போன்ற மாயத்தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள். முதல் முறையாக எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என்று சினிமாவில் வருவதை போல உருவாக்க நினைக்கிறார்கள். இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல் உள்ளது.

75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. அண்ணா ஆட்சி உருவாக்கியதை தவிர்த்து மற்றவை எல்லாம் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. போதை பொருள் கடத்தும் கேந்திர நிலையமாக தமிழகம் உள்ளது. இதற்கு பதில் சொல்ல உதயநிதி முன்வருவாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News