தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 2 அடுக்கு பஸ் நிலையத்தை பார்வையிட்ட முதலமைச்சர்

Published On 2023-02-15 08:59 GMT   |   Update On 2023-02-15 08:59 GMT
  • இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேலம்:

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார்.

அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பஸ் நிலையம், வணிக வளாகம், நேரு கலையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

தொடர்ந்து இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார். தூண்கள் மற்றும் ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார்.

இது தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

அப்போது பஸ் நிலையத்தில் மேலும் என்ன? என்ன? பணிகள் செய்யப்பட உள்ளன?, அவை எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இரண்டு அடுக்கு பஸ் நிலைய பணிகள் முழுவதும் முழுமையாக செய்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விடவேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து பழைய பஸ்நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளிப்புற பகுதிகளில் பெயிண்ட் அடிக்கு பணி, மேல் மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன. 

Tags:    

Similar News