தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு- முபின் பதுக்கிய வெடிபொருட்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை

Published On 2022-11-01 10:17 GMT   |   Update On 2022-11-01 10:17 GMT
  • முபின் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என யூடியூப்பில் தேடிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்து இருந்தனர்.
  • முபின் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவை:

கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி வெடிபொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர்களுடன் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் தினந்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் உடல் கருகி பலியானார். காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் கார் வெடித்ததில் அவரே பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முபினுக்கு கார் வாங்கி கொடுத்தது, வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தது என அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முபின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெடிபொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பி.இடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் உள்ளிட்டவை அடங்கும். இந்த ரசாயன மூலப் பொருட்கள் எளிதில் தீப்பிடித்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வேதியியல் துறை வல்லுன ர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பிஇடிஎன் பவுடர், திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரின் ஆகியவை மிக முக்கியமானவை. இதில் பிஇடிஎன் பவுடர் டெட்டனேட்டர் தயாரிக்கவும், நைட்ரோ கிளிசரின் ஜெலட்டின் வெடிகுண்டு தயாரிக்கவும் பயன்படும் முக்கிய மூலப்பொருட்களாகும்.

மேலும் இவை இரண்டும் ஓரிடத்தில் இணைந்திருக்கும்போது அங்கு சிறு தீப்பொறி ஏற்பட்டால் கூட உடனடியாக தீப்பிடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். இதன் அளவு அதிகரிக்க, அதிகரிக்க சேதம் அடையும் பகுதிகளின் பரப்பும் அதிகரிக்கும்.

ரெட் பாஸ்பரஸ் தீ மளமளவென பரவ உதவும். பொட்டாசியம் நைட்ரேட்டும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது தான். இந்த நான்கு மூலப் பொருட்களையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலவையாக்கி அதில் தீப்பொறி படும்போது பாதிப்பு அதிகளவில் இருக்கும்.

இதில் பிஇடிஎன் பவுடர், நைட்ரோ கிளிசரின் ஆகிய இரண்டும் எளிதில் ஆன்லைன் முறையில் வாங்க முடியாது. பயன்பாடு குறித்து விளக்கி உரிய அனுமதி பெற்ற பிறகே வாங்க முடியும் என்றனர்.

இந்தியாவில் ராணுவம் மற்றும் சுரங்க தொழிலில் மட்டும் சட்டப்பூர்வமாக பிஇடிஎன் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மோப்பநாய், எக்ஸ்ரே மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி அந்த வேதிப் பொருளை எளிதாக கண்டறிய முடியாது. இதனால் பாதுகாப்பு சோதனைகளை எளிதாக கடந்து பல பகுதிகளுக்கும் பயங்கரவாதிகள் எடுத்து செல்கின்றனர்.

கடந்த 2011-ல் டெல்லி ஐகோர்ட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்பில் பிஇடிஎன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது.

புனேவில் நடந்த வெடிகுண்டு நிகழ்வும் இந்த வெடிகுண்டு வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. ஜமேஷா முபின் தான் வாங்கி வைத்து இருந்த பிஇடிஎன் வேதிப்பொருளை நல்ல வேளையாக பயன்படுத்தவில்லை. பயன்படுத்தி இருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே முபின், வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என யூடியூப்பில் தேடிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்து இருந்தனர். என்ஜீனியருக்கு படித்த அவர் பல நாட்கள் தேடுதலுக்கு பின் தான் இந்த பயங்கர வெடிபொருட்களை வாங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பாக முபின் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கைதான முபின் கூட்டாளிகள் 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை காவலில் எடுப்பதற்காக கோர்ட்டில் மனு செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News