தமிழ்நாடு

திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலையில் போலீசார் சோதனை நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் அப்துல் முத்தலீப் வீட்டை காணலாம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

Published On 2022-11-02 06:47 GMT   |   Update On 2022-11-02 06:47 GMT
  • கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அப்துல் முத்தலீப் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.
  • வீட்டில் இருந்த அப்துல் முத்தலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

திருச்சி:

கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திருச்சியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஸ்டார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முத்தலீப் (வயது 35). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இவர் பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இன்று அவரது வீட்டில் உள்ளூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அப்துல் முத்தலீப் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். 6 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அப்துல் முத்தலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு அங்குலம் அங்குலமாக போலீசார் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.

இந்த திடீர் சோதனையில் அப்துல் முத்தலீப்பின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்த ஒருசில ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அப்துல் முத்தலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அமைப்பினர் இந்த சோதனையை நடத்துமாறு திருச்சி போலீசாருக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

Tags:    

Similar News