தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும்- கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு

Published On 2024-10-04 04:08 GMT   |   Update On 2024-10-04 04:08 GMT
  • வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது.

வடவள்ளி:

வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு முன்னறிவிப்பு பெறப்பட்டது.

இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சென்னை 810-850, கோவை 338-360, மதுரை 370-390, நெல்லை 515-540, திருச்சி 379-410, சேலம் 331-360, நீலகிரி 501-510, திருப்பூர் 306-330, கரூர் 313-330, கன்னியாகுமரி 533-540, நாமக்கல் 270-270, மயிலாடுதுறை 888-900, நாகப்பட்டினம் 935-950, தஞ்சை 579-610, திருவாரூர் 725-760, திருவண்ணாமலை 450-490, தூத்துக்குடி 442-450, ராணிப்பேட்டை 406-420, கிருஷ்ணகிரி 278-290, தர்மபுரி 314-340, கடலூர் 702-720.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News