உருக்குலைந்து போன ஏரல் பகுதிகள்: வாழவும்... மீளவும் முடியாமல் மக்கள் தவிக்கும் பரிதாபம்
- உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
- தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்?
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை பேயாட்டம் ஆடி விட்டு சென்றுள்ள பெரு வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது.
ஏரல் திருவமுதி நாடார்விளை, காமராஜ நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் பெரு வெள்ளம் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் பாதிப்பால் உருக்குலைந்து போய் காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.
கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீடுகள், வீட்டில் வளர்க்கப்பட்ட கால் நடைகள், வீட்டில் வாங்கி போட்டிருந்த கட்டில், மெத்தை, டி.வி., பாத்திரங்கள் என ஒட்டு மொத்த உடைமைகளையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது.
இதனால் உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏதாவது வழியில் வெள்ள நிவாரண பொருட்கள், தண்ணீர் கிடைத்தாலும் அது வயிற்றுப் பசியை போக்க போதுமானதாக இல்லை என்றே கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இதுவரை சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பொருட்களையும் இழந்து விட்டு வாழ வழி தெரியாமலும், வெள்ள பாதிப்பில் இருந்து மீள வழி தெரியாமலும் ஏரல் சுற்று வட்டார பகுதி மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இனி என்ன செய்யப் போகிறோம்? என்பது தெரியாமல் தவிக்கும் மக்கள் தங்களது எதிர்காலம் என்ன? என்பது தெரியாமலும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்? என்றும் அப்பகுதி மக்கள் புலம்பியபடியே உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளும் இதே போன்று பாதிப்புகளை சந்தித்துள்ளன. நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது போன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக கண்டறிந்து தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.
தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏரல் போன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து கூடுதல் நிவாரண உதவிகளை மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.