தமிழ்நாடு

மணிப்பூரில் இருந்து தப்பி வந்த தமிழ் குடும்பத்தினருக்கு உதவிய கலெக்டர்

Published On 2023-07-29 03:08 GMT   |   Update On 2023-07-29 03:08 GMT
  • பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
  • 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார்.

சென்னை:

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் சம்பவம் நடந்தது. இதற்கிடையே, மணிப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் அங்கிருந்து தப்பி வந்தார். அவர் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து வாழ்வாதார உதவி கோரினார்.

பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதில், மணிப்பூர் கலவரத்தில் தங்களது வீட்டை தீ வைத்து எரித்து, அடித்து விரட்டி விட்டதாக உருக்கமாக தெரிவித்திருந்தார். பிழைக்க வழியின்றி தவிக்கும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

தாய் மண் தங்களை அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகம் வந்த ஜோசப், 9 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டோமே என்று நெஞ்சுருகி நின்றிருந்தார். அவரின் குடும்ப நிலைமை தினத்தந்தியில் படத்துடன் செய்தியாக வெளியானது. இந்த செய்தியை பார்த்ததும், சென்னை மாவட்ட கலெக்டர் அருணா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். தாயுள்ளத்துடன் அவர்களை அணுகினார்.

அவர்களின் குறைகளை, கனிவுடன் கேட்டறிந்தார். உடனடியாக அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். குடும்பத்துடன் வந்திருந்த அவர்களுக்கு தங்கும் இடத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார். அதற்கு அவர்கள் செங்குன்றத்தில் சிலரின் உதவியால் தங்கியுள்ளோம், எங்களுக்கு வாழ்வதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார். உணவு, உடைகளை வழங்கினார். மேலும் அவர்கள் ஒரு மாத காலத்திற்கு உணவு தேவைக்காக ரேஷனில் இருந்து பொருட்கள் பெற்று தரப்படும் என்ற உறுதியை அளித்தார்.

அடுத்தடுத்து உதவிகளை வழங்கிய கலெக்டர் அருணாவுக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பிழைக்க சென்ற மாநிலத்தில் இருந்து தப்பி வந்த தங்களுக்கு அன்னை தமிழ்நாடு வாரி அணைத்து வரவேற்றதை கண்டு அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, 'அவர்களின் நிலையை பார்க்கும்போதும், கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. உதவி வேண்டி நின்றார்கள், தமிழக அரசு அவர்களுக்கு உடனடி தேவையை பூர்த்தி செய்து இருக்கிறது. 2 பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். அவர்கள் திங்கட்கிழமையில் இருந்து பணிக்கு செல்வார்கள்.

மேலும் ஒருவருக்கும் வேலை வாங்கி கொடுக்க இருக்கிறோம். உடைகள், தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறோம். ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் ரேஷனில் இருந்து வழங்க இருக்கிறோம். என்ன தேவையோ, அதை கேளுங்கள் தருகிறோம் என்று உறுதியை கொடுத்து அவர்களின் வாழ்வாதார பயத்தை போக்கி இருக்கிறோம்' என்று கூறினார்.

Tags:    

Similar News