தமிழ்நாடு (Tamil Nadu)

நீலகிரியில் நிலச்சரிவு வதந்திகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- கலெக்டர் பேட்டி

Published On 2024-08-03 05:23 GMT   |   Update On 2024-08-03 05:23 GMT
  • நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
  • பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறை பயன்படுத்த உள்ள பேரிடர் மீட்புக்கருவிகள் மற்றும் உபகரணங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு தயார்நிலையில் உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 500 பேர் அடங்கிய 42 குழுவினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு போல நீலகிரி மாவட்டத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் பொதுமக்கள் அருகிலுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ளலாம். மேலும் பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடுவட்டம் பேரூ ராட்சியில் மிகவும் அபாயகரமான இந்திரா நகர் மற்றும் டி.ஆர்.பஜார் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர், நடுவட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்பு களையும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News