தமிழ்நாடு

கல்லூரி மாணவி ரெயிலில் தள்ளிவிட்டு கொலையா?- காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-08-01 08:16 GMT   |   Update On 2023-08-01 09:05 GMT
  • காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
  • ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர்.

தாம்பரம்:

பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா. இவர்களது மூத்த மகள் ஹேமிதா (வயது19).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம்ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 27-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடிவந்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஹேமிதா உடல் மீட்கப்பட்டது. அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையே மகள் ஹேமிதா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயது முதலே படித்து வந்துள்ளார். அப்போது டியூஷன் மாஸ்டர் அஜய் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்த காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர். அதன் பிறகு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் ஹேமிதா கல்லூரிக்கு சென்றபோது ஹேமிதாவை மீண்டும் அஜய் சந்தித்து காதலை வளர்த்து உள்ளார். ஆனால் ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனை அவரின் பெற்றோர் வாங்கிக்கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது

இதையடுத்து ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஹேமிதா மர்மமான முறையில் இறந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து டியூசன் மாஸ்டர் அஜய்யிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹேமிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறினால் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஏன் வரவேண்டும்.

அதிகாலை 4 மணிக்கே அவரை வெளியே அழைத்தது யார்? யாரை சந்திக்க சென்றார்? அவரை யாரேனும் தற்கொலை செய்து கொள்வதற்காக தூண்டினார்களா? அல்லது காதலித்து வரும் அஜய்யை பார்ப்பதற்காக அதிகாலை வந்தாரா? என பல கோணங்களில் பல்லாவரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதன் பின்னரே ஹேமிதா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.

இது தொடர்பாக ஹேமிதா பயன்படுத்திய செல்போன் மற்றும் காதலன் அஜய் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள உரையாடல் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News