மீண்டும் வருகிறது: சென்னையில் மாடி பஸ்
- கடந்த 2008-ம் ஆண்டு மாடி பஸ் சேவையை நிறுத்துவதாக போக்குவரத்து கழகம் அறிவித்தது.
- மாடி பஸ் சோதனை ஓட்டத்துக்கும், அரசு போக்குவரத்து கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1997-ம் ஆண்டு மாடி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னைவாசிகள் இடையே இந்த பஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லமுடியும் என்பதால் இந்த வகை பேருந்து சேவையை போக்குவரத்து கழகமும் ஊக்குவித்தது.
ஆனால், இந்த பஸ்களை 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவேண்டும். 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கினால், பஸ்கள் கவிழும் அபாயம் இருந்தது. மேலும், சென்னையில் வாகன நெரிசல் அதிகமானதைத்தொடர்ந்து, இந்த பஸ்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2008-ம் ஆண்டு மாடி பஸ் சேவையை நிறுத்துவதாக போக்குவரத்து கழகம் அறிவித்தது.
அதேநேரத்தில், சென்னையில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மாடி பஸ் சேவையை கொண்டுவருவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், சென்னை, அண்ணாசாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய வழித்தடங்களில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மாடி பஸ்சின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாடி பஸ் சோதனை ஓட்டத்துக்கும், அரசு போக்குவரத்து கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாடி பஸ் உற்பத்தி நிறுவனமானது வேறு மாநிலத்துக்கு தயார் செய்த பஸ்சை இங்கு சோதனை செய்து பார்த்துள்ளது" என்றனர்.