கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கைதட்டி சிரித்து நூதன போராட்டம்
- கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார்.
- வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.
சென்னை:
மாமேதை காரல் மார்க்சை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இழிவாக பேசினார் என கூறி இன்று காலை கவர்னர் மாளிகை அருகே சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் அறியாமையில் பேசுகிறார் என்று கைதட்டி சிரிக்கும் நூதன போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் அமர்ஜித் கவுர், மாநில துணை செயலாளர் வீர பாண்டியன், பெரியசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:-
கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார். அவர் இதுபோன்று அடிக்கடி பேசி வருகிறார். கவர்னர் கூறிய கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும்.
வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.