தமிழ்நாடு

நீலகிரியில் தொடர் கனமழை: பில்லூர் அணை மீண்டும் நிரம்பியது

Published On 2024-07-26 07:22 GMT   |   Update On 2024-07-26 07:22 GMT
  • பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிககள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணை முழு கொள்ளவை எட்டியது.

தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் நேற்று இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி சுமார் 20000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது.

தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை இன்று காலை 93 அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்ததால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News