தென்காசியில் தொடர் மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் 98 அடியை எட்டியது
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உள்ளனர்.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 3.20 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.80 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடியும், சேர்வலாறு அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 45.35 அடியாக உள்ளது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சேரன்மகாதேவியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 19 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 15 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பிய நிலையில் தொடர்ந்து அந்த பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது . இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் என்னும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் 2.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் லேசான சாரல் பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.