மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை: ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1½ அடி உயர்வு
- தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலையில் 5 மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டியது. பேட்டை, சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
மாநகரிலும் லேசான சாரல் பெய்தது. காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வருகிறது. அதே நேரத்தில் காலையில் பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காலையில் நெல்லை-தென்காசி நான்கு வழி சாலைகள் தெரியாத அளவிற்கு பனி படர்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரையிலான நிலவரப்படி களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15.4 மில்லிமீட்டரும், நெல்லை, சேரன்மகாதேவியில் தலா 11.5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசத்தில் 84.35 அடியும், சேர்வலாறு அணையில் 96.13 அடியும் நீர் இருப்பு உள்ளது. அந்த அணைகளுக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து நெல் நடவு பாசனத்திற்காக வினாடிக்கு 504 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக அம்பையில் தொடங்கி வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், மாநகர பகுதிகளில் கண்டியப்பேரி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டாவது மழை நன்றாக செழிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
52.50 அடி கொள்ளளவு கொண்ட களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்ப இன்னும் 2 அடி நீர் மட்டுமே தேவைப்படுகிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 12.49 அடியே நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சீதோஷண நிலை ஜில்லென மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதும், தணிவதுமாக இருக்கிறது. நேற்றிரவு கனமழையால் மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்த நிலையில், இன்று மழை சற்று குறைந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
அணைகளை பொறுத்தவரை ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில் இன்று 55.50 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 1.50 அடி அதிகரித்து 113.25 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், கடனா நதி நீர்மட்டம் 59 அடியாகவும் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாத்தான்குளம், திருச்செந்தூர், கழுகுமலை, காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ அரசடி, சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கழுகுமலை மற்றும் சாத்தான்குளத்தில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.