மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை: கடனா அணை நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரிப்பு
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 2 அணைகளுக்கும் வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர் மழையால் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 746 கனஅடியாக அதிகரித்தது.
பிரதான அணையான பாபநாசம் அணையில் 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 37 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 504 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 56.35 அடியாக உள்ளது. கொடு முடியாறு அணை தொடர்ந்து 50.50 அடியில் நீடிக்கிறது.
மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர்.
மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை மாநகரில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான தெருக்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
அவ்வப்போது பெய்து வரும் மழைக்கே மாநகரில் குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் குளம்போல் தேங்கி கிடப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
மேலும் சந்திப்பு பஸ் நிலைய பகுதியிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சில தெருக்கள் நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதமான சூழ்நிலை நிலவி வருகின்றது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
ஆழ்வார்குறிச்சி அருகே கடனா நதி மற்றும் கடையம் ராமநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் இன்று காலை நிலவரப்படி 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்து 60 அடியானது.
மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 30 அடி நீர் இருப்பு உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 28.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி, ஆய்குடியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக தென்காசி மாவட்ட குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. கடம்பூர், கயத்தாறும் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், காடல்குடி ஆகிய இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.