மூளையை தாக்கும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம்- மாநகராட்சி கமிஷனர்
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில், உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் துணை கமிஷனர் ஜெய சந்திரபானு ரெட்டி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவன இயக்குனர் கேர்லெட் அன்னே பெர்ணாண்டஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7 ஆயிரத்து 265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம் அதிகரித்ததால் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் புகார்கள் குறைந்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் உரிமம் பெற வேண்டும். ரேபிஸ் தவிர மற்ற தடுப்பூசிகளும் நாய்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ப்பட்டு வருகிறது.
மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிர் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். பாதுகாப்பற்ற உணவை உண்ணக்கூடாது. இவைகள் கொரோனா காலத்தின் வழிமுறைகள் அல்ல. தொற்று நோய் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.