குற்றாலம் விடுதியில் நாட்டு மருந்து கடை உரிமையாளர் நகைக்காக கொல்லப்பட்டாரா? தனிப்படை தீவிரம்
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 36). இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவரது அக்காள் கணவர் தாழையூத்தை சேர்ந்த நாராயணகுமார். இவர் பாளை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் முருகசேன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த நிலையில், தனது அக்காள் கணவர் நாராயணகுமாரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக புறப்பட்டார். இதனை அறிந்த நாராயணகுமாரின் நண்பர்களான ஆட்டோ டிரைவர் தங்கதுரை, செல்வம் ஆகியோர் நாங்களும் குற்றாலம் வருகிறோம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று மதியம் நாராயணகுமார், தங்கத்துரை ஆகியோர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றனர். அறையில் முருகசேன் மற்றும் செல்வம் மட்டுமே இருந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அறையில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செல்வத்தை காணவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணகுமார், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார்.
தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலை நடப்பதற்கு சற்று முன் வரை செல்வம் மட்டுமே முருகேசனுடன் இருந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. அதே நேரத்தில் முருகேசனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை காணவில்லை. அந்த நகை திருட்டு போயிருந்தது. ஏற்கனவே செல்வம் மீது திருட்டு, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாலும், அவர் மாயமாகி விட்டதாலும் நகைக்கு ஆசைப்பட்டு முருகேசனை அவர் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பிச்சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.