கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
- நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சென்னை:
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
உலக செவிலியர் தினத்தையொட்டி, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தலைவர் கே.சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இ்தன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கும் மேலான கோரிக்கைகள் முழுமைப்பெற்றுள்ளது. 1,412 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.
'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப பிறகு பகுதி நேர பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5,500 வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
செவிலியர்களின் பணியிட மாற்றத்தில் நிலவிவந்த குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். எம்.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நியமனம் செய்யப்படுகிறார்கள். அதேவேளை 2,400 செவிலியர்களை எம்.ஆர்.பி. மூலம் நியமனம் செய்யும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
செவிலியர் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி, 19 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவரிடம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். அதாவது ரத்தம் உறைதல் மாதிரியான பாதிப்புகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை பெரியளவில் பாதிப்புகள் வெளியே தெரியவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.